போலியோவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 24-ஆம் தேதி உலக போலியோ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் "ஒரு நாள். ஒரு கவனம்: போலியோவை முடிவுக்குக் கொண்டுவருதல்".
போலியோ வைரஸ் தாக்கினால் குணப்படுத்த மருந்து இல்லை; தடுப்பூசி மட்டுமே குழந்தைகளைக் காக்கும் வழி. இந்தியாவில் 2011-க்குப் பிறகு காட்டு வகை போலியோ வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை. ஆயினும் உலகின் சில பகுதிகளில் வைரஸ் இன்னும் உள்ளதால் தடுப்பூசி தொடர்ந்து அவசியம்.
இரண்டு வகைத் தடுப்பு மருந்துகள் உள்ளன. ஊசி மூலம் போடப்படும் ஐபிவி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிப் பக்கவாதத்தைத் தடுக்கிறது. வாய்வழி சொட்டு மருந்தான ஓபிவி, குடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வைரஸ் பிறருக்குப் பரவுவதைத் தடுக்கிறது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி இரண்டுமே வழங்கப்பட வேண்டும்.
ஓபிவி சொட்டு மருந்து பிறந்தவுடனும், பின்னர் 6, 10, 14-ஆவது வாரங்களிலும் வழங்கப்படுகிறது; 16 முதல் 24 மாதங்களுக்குள் ஊக்க டோஸ் போட வேண்டும். ஐபிவி பகுதி டோஸ்கள் 6, 14-ஆவது வாரங்களில் போடப்படுகின்றன. அரசின் சிறப்பு முகாம்களில் தரப்படும் கூடுதல் சொட்டு மருந்தும் பாதுகாப்பானது; அதைத் தவறாமல் போட வேண்டும். ஏதேனும் டோஸ் விடுபட்டிருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.












