அந்தமான் அருகே இன்று உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்டோபர் 31-ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக நவம்பர் 2-ஆம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வானிலை மையத்தின் செய்திக்குறிப்பின்படி, தெற்கு அந்தமான் பகுதியில் நிலவிய வளிமண்டலச் சுழற்சியால் இந்த அமைப்பு உருவானது. மேற்கு-வடமேற்கில் நகர்ந்து நாளை (அக்டோபர் 30) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், 31-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும்.
மழை முன்னறிவிப்பு: அக்டோபர் 30, 31 தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். நவம்பர் 1-ஆம் தேதி வட கடலோர மாவட்டங்கள், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 2-ஆம் தேதி நீலகிரி, கோவையிலும், 3-ஆம் தேதி நீலகிரியிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்; பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். அந்தமான், தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்குச் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
















