சென்னையில் சில நாட்களாகத் தொடர்ந்து பெய்யும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, பல இடங்களில் குண்டும் குழியுமாகியுள்ளன. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்துக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன.
மாநகராட்சி புள்ளிவிவரங்களின்படி, தற்போதைய மழையால் 8,110 இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 5,350 இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வேளச்சேரி, சூளைமேடு, தி.நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், மடிப்பாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் பாதிப்பு அதிகம்.
மழைநீர் தேங்குவதால் பள்ளங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பட்டாளம், சூளை பகுதிகளில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதே நிலை நீடிப்பதாகவும், தற்காலிகமாக மட்டுமே சீரமைக்கப்படுவதாகவும், நிரந்தரமாகத் தரமான சாலை அமைக்கப்படுவதில்லை எனவும் அங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


























