மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு உள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகளே இல்லாத பகுதிகளில், வேறு வழியின்றி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இதே சமூகநீதி மறுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரு தரப்பு மாணவர்களின் சமூக, பொருளாதாரச் சூழல் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது அவரது வாதம்.
நீட் தேர்வுக்குப் பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ வாய்ப்புகள் குறைந்ததால், 2020-21 முதல் 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2020 வரை ஆண்டுக்குச் சராசரியாக 6 அரசுப் பள்ளி மாணவர்களுக்கே வாய்ப்பு கிடைத்த நிலையில், இந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டில் 537 பேர் சேர்ந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அமலில் உள்ள ஒதுக்கீட்டின் தாக்கத்தை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


























