டெல்லியில் மத்திய அரசின் முக்கிய அலுவலகங்கள் செயல்படும் நார்த் பிளாக் கட்டடத்தில் இன்று (அக்டோபர் 26) காலை தீ விபத்து ஏற்பட்டது. உயிர்ச் சேதமோ காயமோ இல்லை என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
கட்டடத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதாக காலை 11.10 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. 6 வாகனங்களில் வந்த வீரர்கள், 11.25 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கட்டடத்தில் சில பழுதுபார்ப்புப் பணிகள் நடந்துவந்ததாகவும், அப்போது சிறிய அளவில் தீ பிடித்ததாகவும் தீயணைப்புத் துறையினர் கூறினர். மற்றொரு செய்தி, வெல்டிங் பணியின்போது பறந்த தீப்பொறி அருகிலிருந்த ஃபைபர் தொட்டியின் மீது பட்டதால் தீப்பற்றியதாகக் கூறுகிறது. கரும்புகையைக் கண்ட அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
பொருட்சேதம் எவ்வளவு, ஆவணங்கள் ஏதேனும் சேதமடைந்ததா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தக் கட்டடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளன.


























