தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாகப் பதிவான வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுவரை 177 புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அவருக்குச் சொந்தமான சென்னை, திருச்சி இடங்கள் உட்பட 9 இடங்களில் சோதனை நடந்தது; அமலாக்கத்துறையும் இது தொடர்பாக விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 18-ம் தேதி போலீஸ் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரானதாகவும், எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்குத் தயார் என்றும் அன்பில் மகேஷ் தரப்பு தெரிவித்தது. போலீஸ் தரப்பில், குற்றச்சாட்டுகள் தீவிரமானவை எனவும், முன்ஜாமீன் வழங்கினால் உண்மைகள் வெளிவராது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.


























