கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளன.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் கடந்த சில நாட்களாகத் தொடர்மழை பெய்கிறது. மலைப்பாதைகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதுடன், நிலச்சரிவும் மரங்கள் முறிந்து விழும் அபாயமும் உள்ளது. மண்சரிவால் தேனி மாவட்டத்தை இணைக்கும் கொடைக்கானல் – அடுக்கம் மலைப்பாதை முழுமையாக மூடப்பட்டுள்ளது. தற்போது வத்தலக்குண்டு மலைப்பாதை வழியாக அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
மறு உத்தரவு வரும் வரை வெளிமாநில, வெளிமாவட்டச் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே அங்குத் தங்கியுள்ளவர்களும் உள்ளூர் மக்களும் அவசியமின்றி வெளியே செல்லக் கூடாது என்றும், அருவிகள், பாதுகாப்பற்ற மலை விளிம்புப் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.













