காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்து, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 60-ஆவது கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,000 கன அடி நீரைத் தமிழகத்துக்குத் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. தமிழ்நாடு தரப்பில் வினாடிக்கு 7,500 கன அடி கோரப்பட்டிருந்தது.
தமிழகத்துக்கு வர வேண்டிய நீர் முழுமையாக வழங்கப்படாததால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. வாசன் வெளியிட்ட அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி நடைபெற்று வருவதாகவும், விவசாயிகளும் குடிநீர்த் தேவையும் காவிரி நீரை நம்பியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிக அவசியம் என்றும், தமிழக அரசும் உரிய நீரைப் பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.












