நீலகிரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் – உதகை மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பர்லியாறு அருகே சரிந்த மண்ணில் அரசுப் பேருந்து ஒன்று சிக்கியது. அதில் இருந்த 6 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் குன்னூர் வட்டம் பர்லியாறில் 250 மி.மீ. (25 செ.மீ.) மழை பதிவானது. இதுவே மாவட்டத்தில் அதிகபட்ச அளவாகும். கீழ் கோத்தகிரியில் 200 மி.மீ., எடப்பள்ளியில் 161 மி.மீ., கோத்தகிரியில் 137 மி.மீ. மழை பெய்தது.
உதகையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற பேருந்து மீது மண் சரிந்ததில், வாகனம் பெரும் சேதமடைந்தது. மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த ஓட்டுநரும் நடத்துநரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குன்னூர் – மேட்டுப்பாளையம், கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலைகளில் நள்ளிரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இருபுறமும் வாகனங்கள் வழியில் நிறுத்தப்பட்டன; மண் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மஞ்சூர் – கோவை சாலையில் பெரும்பள்ளம் பகுதியில் சாலையின் நடுவே விழுந்த பெரிய பாறையை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் மூலம் அகற்றினர்.
கனமழை காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளையும் நடத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தியுள்ளார்.


















