காங்கிரஸ் கட்சி அதன் எதிர்மறை அரசியலால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். டெல்லியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.
டெல்லி புறநகர்ப் பகுதியில் ரூ.8,941 கோடி மதிப்பிலான, டெல்லி குடிநீர் வாரியத்தின் 33 திட்டங்களைத் தொடங்கி வைத்த அவர், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முன்வைக்கும் "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டை கடுமையாக விமர்சித்தார். "பாஜக அரசுகள் தேர்ந்தெடுக்கப்படும்போதெல்லாம் இவ்வாறு சாக்குச் சொல்கிறார்கள்; இதன் மூலம் ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்கவே முயல்கிறார்கள்" என்றார்.
கேரளம், இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வென்றபோதும் இதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் இதே தேர்தல் ஆணையமும்தான் இருந்தன என்று சுட்டிக்காட்டிய அவர், தோல்வியடையும்போது மட்டும் ஆணையத்தைக் குறை கூறுவதாகச் சாடினார். நீதிமன்றத் தீர்ப்புகளும் சாதகமாக இருந்தால் நல்லவை, இல்லையென்றால் கெட்டவை என்று எதிர்க்கட்சிகள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களின் தீர்ப்பை எதிர்க்க போராட்டங்களால் பயனில்லை என்றும், தேர்தலில் வெல்ல விரும்பினால் மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் பல மாநிலங்களில் பல பத்தாண்டுகளாகத் தோல்வியையே சந்தித்து வருவதாகவும், 2014-ல் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வாக்காளர்கள் அக்கட்சியை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.




















