விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயதுச் சிறுமி காணாமல் போன வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையைத் தொடங்கி, சிறுமியின் தாயாரிடம் விசாரணை நடத்தினர்.
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரைத் தெருவில் வசிக்கும் வடிவேலு – பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஹேமாவதி. அதே ஊர் அரசுப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த 11ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, இரவு பெற்றோருடன் உறங்கினார். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமியைக் கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின்படி 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல கோணங்களில் விசாரணையும் தேடுதலும் நடைபெற்றன.
சிறுமி காணாமல் போய் 11 நாட்கள் ஆகியும் எந்தத் தடயமும் கிடைக்காததால், தமிழக காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் ரேவதி ஆகியோர் சிறுமியின் தாயாரிடம் விசாரித்ததுடன், வீட்டைச் சுற்றியுள்ளவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.




















