அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளின் வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் பொறாமைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பின் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டஸ்க், உலக அரங்கில் இந்தியா வகிக்கும் முக்கியப் பங்கை போலந்து மதித்துப் பாராட்டுவதாகக் கூறினார். இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து மோடியுடன் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மோடியை "நண்பர்" என்று குறிப்பிட்ட அவர், இந்தியா போன்ற வலிமையான நாட்டை மோடி போன்ற ஒருவர் வழிநடத்துவது அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பதாகக் கூறினார். கடந்த 35 ஆண்டுகளில் இரு நாடுகளும் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், அதைக் கண்டு உலகம் பொறாமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோடி போலந்துக்குச் சென்றபோது, இந்தியா–போலந்து உறவு உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்டது. அதே ஆண்டு இரு நாடுகளும் தங்களது 70 ஆண்டு கால தூதரக உறவையும் கொண்டாடின.
டஸ்க்குடன் போலந்தின் நிதி மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் ஆண்ட்ரெஜ் டொமான்ஸ்கி மற்றும் குழுவினரும் வந்துள்ளனர். போலந்து பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.




















