தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் நீர்மட்டம் சரிவைச் சந்தித்துள்ளது.
2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் நிலத்தடி நீரின் ஆழம் 6.09 மீட்டர் அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 5.4 மீட்டரும், கள்ளக்குறிச்சியில் 4.95 மீட்டரும் நீர்மட்டம் கீழே சென்றுள்ளது.
தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணைகளிலும் நீர்நிலைகளிலும் நீர் இருப்பு குறைந்துள்ளது. எல் நினோ தாக்கமும் வறண்ட வானிலையும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
ஏரிகள், அணைகளை நிரப்பவும் நீர் ஆதாரங்களைப் பெருக்கவும் தற்போது வடகிழக்குப் பருவமழையையே மாநிலம் நம்பியுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு முறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


















