திண்டுக்கல்லைச் சேர்ந்த திமுக மாநில நிர்வாகி வி. ஜெயன் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தவெகவில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார். "கனத்த இதயத்துடனும் மிகுந்த மன வருத்தத்துடனும்" இந்த முடிவை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாகத் திமுகவில் பயணித்ததாகக் கூறிய ஜெயன், கட்சிப் பணியாற்ற வாய்ப்பளித்த கட்சித் தலைவர், துணைப் பொதுச் செயலாளர் இ. பெரியசாமி, கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட திமுகவில் முக்கிய நிர்வாகியாகச் செயல்பட்டு வந்த அவர், கடந்த சில மாதங்களாகவே கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது. அவர் எந்தக் கட்சியில் சேரப்போகிறார் என்பது குறித்து அவர் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


















