சென்னையில் ஒரே நேரத்தில் அதிகனமழை பெய்தாலும் அதைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், மழைக்கால ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.
இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ காரணமாக வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், வடகிழக்குப் பருவமழை தற்போது சாதகமாக உள்ளதாகக் கூறினார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானால் அதீத மழை பெய்யக்கூடும் என்பதால், மாநில பேரிடர் மேலாண்மைத் துறையிடமிருந்து அறிவுரைகள் வந்துள்ளன. முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநில மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து 14 மணி நேரம் அதிகனமழை பெய்தால் அது சவாலாக இருக்கும் என்றும், அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் அதிக மழை பெய்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்த்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று அதிகாலை 5 மணி வரை மழை தொடர்பாக 1,212 புகார்கள் வந்ததாகத் தெரிவித்த ஆணையர், மழைநீர் தேக்கம், தெருவிளக்குகள், மரம் விழுந்தது தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார். மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது; தெருவிளக்குகளைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. புகார் மீதான பணி முடிந்ததும் அதைப் புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



















