குமரி மாவட்டத்தின் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒரு வாரத்துக்குப் பிறகு இன்று நீக்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் அருவியில் வெள்ளம் கொட்டியது. பாதுகாப்பு கருதி கடந்த ஒரு வாரமாகக் குளிக்கத் தடை இருந்தது. தற்போது மழை குறைந்து, நீர்வரத்து மிதமாகியுள்ளதால் தடை விலக்கப்பட்டது. இன்று வேலை நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
இந்த இரண்டு வாரங்களில் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது. பேச்சிப்பாறை 9 அடியும், பெருஞ்சாணி 15 அடியும், சிற்றாறு அணைகள் 5 அடியும், மாம்பழத்துறையாறு 20 அடியும், முக்கடல் 13 அடியும் உயர்ந்துள்ளன.
இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 26.90 அடி; வினாடிக்கு 416 கன அடி நீர் வருகிறது, 116 கன அடி வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை 53.85 அடியாக உள்ளது; வரத்து 449 கன அடி, வெளியேற்றம் 225 கன அடி. நாகர்கோவில் குடிநீருக்கான முக்கடல் அணை 18.50 அடியை எட்டியுள்ளது.
அருவிப் பகுதிக்கு வரும் பயணிகள் நீர்வரத்தின் அளவைக் கவனித்துப் பாதுகாப்பாகக் குளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















