புதுச்சேரி மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமான ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் நாடு முழுவதும் மூடப்பட்டன. தற்போது தொற்றுப்பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில தொற்றுப் பரவலை கணக்கில் கொண்டு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி – கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் இருந்து தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சியவாயம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பில், பள்ளிகளில் வருகைப் பதிவேடு கிடையாது என்றும், ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மதிய உணவு தற்காலிகமாக வழங்கப்படாது என்றும் தெரிவிக்கபப்ட்டிருக்கிறது.
























