முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 7 மணி அளவில் கடையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் நாலா புறமும் வெடித்து சிதறின. அதோடு அருகில் இருந்த செல்போன் மற்றும் பேக்கரி கடைக்கும் தீ பரவியது.
அருகில் பேக்கரி கடையில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்தன. இதில் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் கடை அருகே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த 25 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இதனிடையே காயமடைந்தவர்களில் சிகிச்சை பலனின்றி நாசர் என்பவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் ,வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”விபத்தில் 5 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக”, டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
”பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும், தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
























