கோவையில் கல்லூரி பேராசிரியர் திருநாவுக்கரசு அவரிடம் பயிலும் மாணவிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை கல்லூரி நிர்வாக சஸ்பெண்ட் செய்த நிலையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை எனக்கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை பேரூரில் இயங்கி வருகிறது தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி. தமிழ்படிப்புக்கென பெயர்பெற்ற இக்கல்லூரியில் முனைவர் கா. திருநாவுக்கரசு பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் அக்கல்லூரி மாணவிகளிடம் எல்லைமீறி பேசுவதாக புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், திருநாவுக்கரசு அக்கல்லூரி மாணவியிடம் இரவு நேரத்தில் ஆபாசமாக பேசிய உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அக்கல்லூரி மாணவிக்கு இரவு 9.30 மணிக்கு மேல் டெலிகிராம் செயலியில் திருநாவுக்கரசு மெசேஜ் அனுப்பியுள்ளார். “வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்! பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, தனியா இருக்க போர் அடிக்கலயா, வீட்ல அம்மா இல்லாதப்ப சொல்றேன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கலாம்.” என்றெல்லாம் எல்லை மீறி பேசியுள்ளார்.
அத்துடன் நில்லாமல் சட்டையைக் கழற்றி உள் பனியனுடன் செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார். அம்மாணவியையும் அதுபோல் புகைப்படம் எடுத்து அனுப்பக்கோருகிறார். இந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் வெளியாகி மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த உரையாடல் குறித்து அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் திருநாவுக்கரசிடம் விளக்கம் கேட்டதற்கு, திருநாகக்கரசு அதனை ஒப்புக்கொண்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநாவுக்கரசு மீது கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை மேற்கொண்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்லூரி நிர்வாகம் கூறிய நிலையில் திருநாவுக்கரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
























