தமிழகத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இதைத் தெரிவித்தார்.
கிரஷர் குவாரிகளில் அதிக பாரம் ஏற்றினால்தான் லாரிகளுக்கு லோடு கிடைக்கும் என்ற நிலை உள்ளதாகவும், இதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குவாரி உரிமையாளர்களின் வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் சென்றால் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு விட்டுவிடுவதாகவும், மற்ற லாரிகளை மடக்கிப் பிடித்து அதிக பாரம் வழக்கு போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மாதாந்திர மாமூல் தர மறுக்கும் சிறிய லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப் போடப்படுவதாகவும் அவர் கூறினார். இவை சங்கத்தின் குற்றச்சாட்டுகள்; அரசுத் தரப்பு விளக்கம் இந்தச் செய்தியில் இல்லை.
அதிக பாரம் ஏற்றுவதைக் குறைத்தால் பொருட்களின் விலை உயரும் என அரசே கூறுவது விந்தையாக உள்ளது என்றும், சரக்கு அனுப்புநர் மற்றும் பெறுநர் மீதும் வழக்குப் பதிய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆறு ஆண்டுகளாகச் சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிக பாரம் ஏற்றுவதைக் கைவிடத் தாங்கள் தயார் என்றும், அரசு தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். இந்தக் கோரிக்கைகளை முதல்வர் மற்றும் போக்குவரத்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவே வேலைநிறுத்தம் என்று அவர் தெரிவித்தார்.

















