அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தாமே வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வென்ற இசக்கி சுப்பையா, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்ததால் இந்தத் தொகுதி காலியானது. அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஐந்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி களமிறங்கும் என்று சீமான் கூறினார். தம்மைக் கண்டு தவெகவினர் ஏன் அஞ்சுகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், தாம் அனைத்துச் சாதியினருக்குமான பொது வேட்பாளர் என்றும் குறிப்பிட்டார். உறவுமுறை அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் போட்டியிட முடியாது என்ற அவர், உறவுகள் வேறு, அரசியல் நிலைப்பாடு வேறு என்றும் கூறினார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் காரைக்குடியில் போட்டியிட்ட சீமான் தோல்வியடைந்தார். அவர் அம்பாசமுத்திரத்தில் நிற்பார் என்ற தகவல் முன்பே பரவியிருந்த நிலையில், இப்போது அதை அவரே உறுதிப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இடைத்தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. வேட்பாளர் தேர்வு தொடர்பாக மற்ற கட்சிகளின் முடிவுகளுக்காக அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.
















