கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர், மணலையும் சிறிய குச்சியையும் மட்டுமே கொண்டு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருகிறார். ‘ஆஷாட்டி அம்மும்மா’ அல்லது ‘இந்திரா அம்மா’ என அன்புடன் அழைக்கப்படும் அவர், சுமார் பத்து ஆண்டுகளாக எழுத்துகள், எண்கள், கணிதம் ஆகியவற்றைக் கற்பித்து வருகிறார்.
மாநிலத்தின் பாரம்பரிய ‘ஆசான் களரி’ முறையோடு தொடர்புடைய பாணியை அவர் பின்பற்றுகிறார். வீட்டுத் திண்ணையில் பாயில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு முன்னால் மணலைப் பரப்பி, குச்சியால் சமப்படுத்திய பிறகு, ஆங்கிலம் மற்றும் மலையாள எழுத்துகளை அதில் எழுதிக் காட்டுகிறார். குழந்தைகள் அதைப் பார்த்து விரல்களால் வரைந்து பழகுகின்றனர்.
இங்கு நோட்டுப் புத்தகமோ, பேனாவோ, கரும்பலகையோ கிடையாது. தவறானதை அழித்துவிட்டு மீண்டும் எழுதலாம் என்பதால் காகிதம் இல்லாமலேயே பயிற்சி செய்ய முடிகிறது.
இதன் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலானது. ஒரு பயனர் இதை ‘உலகின் மிக அழகான வகுப்பறை’ என்று வர்ணித்துள்ளார்.


























