கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் போன்ற பன்முக அடையாளம் கொண்ட படைப்பாளி ஃப்ரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பத்தினிப்பாறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஃப்ரான்சிஸ் கிருபா. இயல்பில் கவிஞரான இவர் ‘கன்னி’ என்கிற நாவல் மூலம் எழுத்தாளராகவும் அறிமுகமானார். நவீன இலக்கியத்தில் நெய்தல் நிலத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட கன்னி நாவல் பரவலான வாசகப்பரப்பை சென்று சேர்ந்தது. தமிழின் முக்கியமான நாவல்களின் வரிசையில் அடங்கக் கூடிய படைப்பாக அது இருந்தது. கன்னி நாவலுக்கு 2007ம் ஆண்டில் விகடன் விருது கிடைத்தது.
இவர், மல்லிகை கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலின்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளுக்காக சுந்தர ராமசாமி விருது, மீரா விருது ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது.
வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடலாசிரியராகவும் நிறைய பாடல்களை எழுதியுள்ளார். மேலும், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கான திரைக்கதை வசனத்தையும் எழுதியிருக்கிறார்.
தமிழ் இலக்கிய உலகில் அனைவராலும் அறியப்பட்ட, மதிக்கப்பட்ட படைப்பாளி ஃப்ரான்சிஸ் கிருபா. அவரது மரணம் தமிழ் இலக்கிய உலகின் பேரிழப்புகளில் ஒன்று. அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியான ஃப்ரான்சிஸ் கிருபாவுக்கு அஞ்சலி!
ஃப்ரான்சிஸ் கிருபாவுக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்புபவர்கள்
Sebastian
House no 5
Pathniparai,
Thothakudi post
Tirunelveli district
Tamil Nadu 627151
Naguneri via NH 47 Highway
இம்முகவரிக்குச் செல்லலாம்.
























