திருச்சி சிவா எம்.பி. – அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களின் மோதல் போக்கால் இருதரப்பினருக்கும் மனக்கசப்பு இருந்துவந்த நிலையில், இருவரும் சந்தித்துப் பேசி பிரச்சினையை முடித்துவைத்துள்ளனர்.
திருச்சியில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து மைதானத்தை திறந்துவைக்கும் விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு சென்றபோது, அவ்விழாவின் அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை எனக்கூறி அவரது ஆதரவாளர்களால் அமைச்சர் நேருவின் கார் வழிமறிக்கப்பட்டு அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கே.என்.நேரு ஆதரவாளர்களால் திருச்சி சிவாவின் வீடு மற்றும் கார் போன்ற உடைமைகள் கற்கள் வீசி சேதமாக்கப்பட்டன. இச்சம்பவம் காரணமாக இருதரப்பு ஆதரவாளர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த விவகாரம் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய திருச்சி சிவா எம்.பி. செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவா எம்.பி.-ஐ அவரது இல்லத்தில் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, ”எங்கள் இருவருக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறால் இவ்வாறு அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன. முதல்வர் ஸ்டாலின் என்னிடம், ’நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டிக்காத்து வருகிறவர்கள். உங்களுக்குள் இந்த மாதிரி எந்தப் பிரச்சினையும் இருக்ககூடாது. போய் சமாதானம் பேசிவிட்டு வாருங்கள். அப்பொழுது தான் உங்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மக்களுக்குத் தெரியும். இதனால் கழகத்திற்கும் ஆட்சிக்கும் நல்லபெயர் வரும்’ என்று சொன்னார்கள். நாங்கள் எங்களுக்குள் மனம்விட்டுப் பேசிவிட்டோம். இனி எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் நடக்காது.” என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய திருச்சி சிவா எம்.பி., “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தலைவரின் குரல் எங்கள் செவியில் உரைத்துக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தனக்கு எந்தத் தொடர்புமில்லை என்று அமைச்சர் நேரு என்னிடம் சொல்லிவிட்டார். எங்களைப் பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சி எங்களுக்கு முக்கியம் என்கிறவகையில், கழக வளர்ச்சிக்காகவே எங்களுடைய வருங்கால செயல்பாடுகள் இருக்கும்” என்று தெரிவித்தார்.


























