இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத அல்லது வளர்க்க விருப்பமில்லாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பராமரிப்பில் விட்டுச் செல்லும் “குழந்தை பெட்டிகளை” அறிமுகப்படுத்த இலங்கை நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சமீபத்திய சில வருடங்களில் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளை வீதியில் விட்டுச்செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த ஆறு வருடங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்தது 80 சிறுவர்கள் பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அத்துறையின் ஆணையாளர் என்.ஐ.லியனகே கூறுகையில், பிறந்த குழந்தைகளை வீதிகளிலும் பாதுகாப்பற்ற பொது இடங்களிலும் பெற்றோர்கள் கைவிட்டுச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்தே, “குழந்தை பெட்டிகளை” அறிமுகப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். மேலும் இவ்வாறு கைக்குழந்தைகளை “குழந்தை பெட்டிகளில்” விட்டுச் செல்ல விரும்பும் பெற்றோருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் இதே போன்ற காரணங்களுக்காக 1992ம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


























