இந்தியத் திரையுலகையே தன் காந்தக் குரலால் கட்டிப்போட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.
எஸ்.பி.பி 1946ம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் நெல்லூரில் பிறந்தார். ஆரம்பத்தில் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடி வந்த அவர் 1966ம் ஆண்டு தெலுங்கில் வெளியான மரியாதை ராமண்ணா திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். கேட்கும் எவரையும் எளிதில் ஈர்த்துவிடும் வசியத்தை அவர் குரல் பெற்றிருந்தது. எஸ்.பி.பி அறிமுகமான காலகட்டத்த்தில் தமிழில் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்தனர். பாரம்பரிய இசை ஒழுங்குகளோடு பாடல்களைப் பாடிய அவர்களுக்கு மத்தியில் துள்ளல்மிக்க இளங்குரலாய் எஸ்.பி.பி தமிழுக்கு அறிமுகமாகிறார். பாடகரைப் பொறுத்தவரை அவர்களுக்கு நல்ல குரல் வாய்க்கப்பெறுவது பெரும் பேறுதான். அக்குரலைக் கொண்டு அவர்கள் நிகழ்த்தும் புதுமைகளாலேயே அவர்கள் வெற்றி பெற முடியும். எஸ்.பி.பி அவரது குரலைக் கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தினார்.
நவரசங்களையும் தன் குரல் வழியே வெளிப்படுத்த முடியும் என்பதை அவர் நிகழ்த்திக் காட்டினார். காதல் ரசம் சொட்டும் பாடல்கள் ஒரு புறம் என்றால், பாடல்களில் நிகழ்த்தும் தன் அசாத்திய குறும்புத்தனத்தின் மூலம் நம்மை சிரிக்க வைக்கும் அக்குரலுக்கு ’உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்’ என்று அழ வைக்கவும் தெரியும். இளையராஜா – எஸ்.பி.பி கூட்டணி நிகழ்த்திய சாதனைகள் அளவில்லாதது. நானும் பாலுவும் இசையும் ஸ்வரமும் போல என்று இளையராஜாவே சொல்லியிருக்கிறார். அவர்கள் கூட்டிணைவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. எஸ்பிபியின் சிறந்த பாடல்கள் என்கிற பட்டியலை இடுவது கடினம். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவரது எல்லா பாடல்களும் சிறந்ததுதான்.
எஸ்.பி.பியுடன் பணியாற்றியவர்களுக்குத் தெரியும் அவர் எவ்வளவு குதூகலமானவர் என்று. பாடகி ஜானகிக்கு கைக்குட்டை இல்லாமல் பாட முடியாது. எஸ்.பி.பி அக்கைக்குட்டையை எடுத்துக் கொண்டு ஓடி விடுவாராம். சின்னக்குயில் சித்ரா பாட வந்த போது தெலுங்குப் பாடல் ஒன்றினை வேண்டுமென்றே வரிகளை மாற்றி எழுதிக் கொடுத்து பாட வைத்து சேட்டை செய்வாராம். இது போன்று அவரது குறும்புத்தனங்களும் அவரது பாடலைப் போலவே பிரசித்தி பெற்றவை.
மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ பாடலில் காட்டப்படுவது போல் மூச்சுவிடாமல் பாடக்கூடிய திறமை ஒருபுறம் என்றால் பாடலுக்கிடையில் சிரிப்பது அவரது இன்னொரு முக்கிய அம்சம். எம்.எஸ்.வி தொடங்கி அனிருத் வரை பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பயணித்திருக்கிறார். தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தியத் திரையுலகில் யாராலும் ஈடு செய்ய முடியாத ஓர் சாதனையை அவர் நிகழ்த்தியிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதிலும் எந்த இடத்திலும் தோல்வியையே கண்டிராத மனிதராகவே அவர் தொடர்ந்ததுதான் பெரும் சாதனை. அந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்ந்து கொண்டே இருக்கும்.
























