கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் ’STR48’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
கமல்ஹாசனின் ’ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கவிருக்கிறார். கமல்ஹாசனுடன் இணைந்து இப்படத்தை ஆர்.மகேந்திரன் தயாரிக்கிறார். தற்சமயம் இப்படத்திற்கு தற்காலிகமாக ’STR48’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அண்மையில், சிலம்பரசன் நடித்து, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியானது. அதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய ’மாநாடு’ திரைப்படம் வெளியானது. தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த சிம்புவுக்கு இவ்விரு படங்களும் பெரும் வெற்றிப்படங்களாக அமைந்து அவரது அடுத்த அத்தியாயத்தைத் துவக்கிவைத்தன.
இதைத்தொடர்ந்து, அடுத்ததாக அவரது நடிப்பில் ’பத்து தல’ படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டீசர் கடந்த 3ம் தேதி வெளியான நிலையில், ’பத்து தல’ படம் இம்மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சிம்புவின் முந்தைய படங்களின் தாக்கம் காரணமாக ’பத்துதல’ படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ’STR48’ படம் பற்றிய அறிவிப்பு, சிம்பு ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. இப்படத்தின் பிற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.


























