இன்று தஞ்சை அருகே பூண்டியில் உள்ள கல்லூரியில், டிடிவி தினகரன் – கிருஷ்ணசாமி வாண்டையார் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது, இந்நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து சசிகலா 25 இடங்களில் தொண்டர்களை சந்தித்தகத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பெங்களூரு சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா விடுதலை ஆனார். அப்போது அதிமுக கொடி கட்டிய காரில் அவர் வந்தார். அதிலிருந்து சசிகலா எங்கு வெளியில் சென்றாலும் அவரது காரில் அதிமுக கொடி இடம் பெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக தெரிவித்த சசிகலா தேர்தலுக்கு பின்னர் தொலைப்பேசி உரையாடல் மூலம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதிமுகவினர், அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதால், பொன்விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரமாண்டமாக பொன்விழா மாநாடு நடத்தவும் அதிமுக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சசிகலாவும் பொன்விழாவை ஒட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் சசிகலா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் சென்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்று அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.
தற்போது சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்திக்க புறப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களுக்கு ஒரு வாரம் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் சென்னையில் இருந்து கிளம்பினார். தி.நகர் வீட்டில் இருந்து கிளம்பிய சசிகலாவுக்கு, ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். அவர் 25 இடங்களில் தொண்டர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தஞ்சாவூரில் நடைபெறும் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் இன்று காலை பங்கேற்கிறார். 28 ஆம் தேதி மதுரை செல்லும் சசிகலா அங்கு முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி, அதன் பின் ஆதரவாளர்களை சந்திக்கிறார், பின்னர் கோரிப்பாளையம் பகுதியில் ஆதரவாளர்களை சந்திக்க இருக்கிறார்.
29 ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். 30 ஆம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்ற பின்னர், அதரவாளர்களுடன் சந்தித்து பேச இருக்கும் சசிகலா, அங்கிருந்து தஞ்சாவூர் திரும்புகிறார். நவம்பர் 1 ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
திருநெல்வேலி உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
























