தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ உடல் ரீதியாக வைத்துக்கொள்ளும் உறவு தவறானது என்ற இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377, கடந்த 2018ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் உறவில் ஈடுபடுவது தவறல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு பால்புது மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்வதற்கு அங்கீகாரம் அளிக்கப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கக்கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, வழக்கு குறித்து மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதற்கான மத்திய அரசின் பதில் மனுவில் தன்பாலின திருமணங்களுக்கு அனுமதி தரமுடியாது என்றும், ஒரே பாலினத்தவர்கள் இணைந்துவாழ்வது இந்தியக் குடும்பக் கொள்கையுடன் ஒப்பிடத்தகுந்ததல்ல என்றும் கூறப்பட்டது. இது பால்புது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு இதன் விசாரணை ஏப்ரல் 18ல் நடைபெறவிருக்கிறது.


























