பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் சாய்னா தனது ஆறு மகள்களுக்கும் கல்வி அளித்து அவர்களை மருத்துவர்களாக்கிச் சாதித்துள்ளார்.
ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சாய்னா தனது உறவினர் டிவிபி அகமது குஞ்சம்மே திருமணம் செய்து கொள்வதற்காக படிப்பை பாதியில் நிறுத்தினார். அப்போது அவருக்கு வயது 12 .

சென்னையில் வியாபாரம் பார்த்து வந்தார் அகமது குஞ்சம்மை. திருமணத்திற்கு பிறகு அகமது கத்தார் சென்று அங்கு வேலை பார்த்து வந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு கத்தார் நாட்டிலேயே மனைவியுடன் குடியேறினார், அகமது.
கால ஓட்டத்தில் சாய்னாவுக்கு ஆறு மகள்கள் பிறந்தனர். அதற்காக அகமது, சாய்னா, தம்பதியர் கவலைப்படவில்லை. மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட அவர்கள் விரும்பினர். அதற்காக தங்களின் மகள்களுக்கு எப்பாடு பட்டாவது நல்ல கல்வியை அளிக்க அகமதுவும் சாய்னாவும் முடிவு செய்தார்கள்.
மகள்களின் பெயர்கள் முறையே பாத்திமா, ஹாஜிரா, ஆயிஷா, பயிசா, ரஹ்னாஸ் மற்றும் கடைப்பெண் அமீரா, ஆவர். அவர்கள் ஆறு பேருமே இன்று மருத்துவர்கள் ஆகியிருக்கிறார்கள்.
சாய்னா இது குறித்துப் பேசுகையில், ”எனது பிரசவத்தைப் பற்றி எங்கள் ஊரில் உள்ள பெண்கள் கேள்விப்படும்போதெல்லாம், என்னைவிட அவர்கள்தான் அதிகக் கவலைப்படுவார்கள். நான் என் பெண் குழந்தைகளை வளர்ப்பதைப் பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. அவர்களை ஒரு சுமையாக நான் நினைத்ததே இல்லை. என்ன ஆனாலும் அவர்கள் என் குழந்தைகள் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
நன்றாகப் படித்து அவர்களின் வாழ்க்கையில் நல்ல நிலைகளை அடைய வேண்டும் என நினைப்பேன். என் கணவர் நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அவரைப்போலவே தன் மகள்களுக்கும் நல்ல பொது அறிவு இருக்க வேண்டும் என விரும்பினார். நாங்கள் விரும்பியதைவிட எங்கள் மகள்கள் அவர்களாகவே கடும் முயற்சி எடுத்துப் படித்தார்கள்.” எனப் பெருமை பொங்கச் சொல்கிறார்.
சாய்னாவின் முதல் நான்கு மகள்களும் ஏற்கனவே மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள். ஐந்தாவது மகள் சென்னையில் மருத்துவப்படிப்பின் இறுதியாண்டும், கடைசி பெண் மங்களூருவில் எம்பிபிஎஸ் முதலாமாண்டும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாய்னாவின் முதல் நான்கு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர்களின் கணவர்களும் மருத்துவர்களாக இருப்பது சாய்னா குடும்பத்தின் தனிச்சிறப்பு.
கத்தாரில் பணியாற்றி வந்த அகமது, தான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அது நடக்காமல் போனதால், தனது ஆறு மகள்களையும் மருத்துவராக்கிவிட்டார். மகள்களின் திருமண ஏற்பாட்டின் போது, வரும் மாப்பிள்ளைகளும் அதே துறையில் இருந்தால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என்றும், விட்டுக் கொடுத்துப் போவார்கள் என நினைத்து, மருத்துவம் படித்த மணமகன்களைத் தேடித் தேடி அகமது தேர்வு செய்ததாகச் சொல்கிறார், சாய்னா.

சுமார் 35 ஆண்டுகள் கத்தாரில் பணியாற்றிவிட்டு, இந்த லட்சியத் தம்பதிகள் தங்களது மகள்களுடன் கேரளம் திரும்பிவிட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகமது மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது இரண்டு மகள்களுக்கு மட்டுமே திருமணமாகியிருந்தது.

தனது கணவரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் மற்ற 2 மகள்களுக்கும் மருத்துவர்களையே மணமுடித்து வைத்ததோடு, கடைசி 2 மகள்களும் மருத்துவம் படிக்க உறுதுணையாக இருந்து வருகிறார் சாய்னா.
























