கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால் புகட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி குழந்தைகள் நலன் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக தொடரப்பட்ட மனுவில் தடுப்பூசிகளை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால் புகட்டும் தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் அறிவுறுத்தல்கள் மட்டும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர செயல்பாட்டுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இது ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் அரசியல் சாசன பிரிவு 14, 15 மற்றும் 21 ஆகியவை வழங்கும் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பாக கொள்கை முடிவுகள் ஏதேனும் எடுக்கப்பட்டிருக்கிறதா, இதுவரை நாடு முழுவதும் எவ்வளவு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உடன் இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவ்வாறு மேற்கொண்டால் இந்த விவகாரம் மேலும் தாமதமாகும் எனவே மத்திய அரசின் முடிவை முதலில் தெரிந்து கொள்வோம் என மனுதாரர்களுக்குக் கூறினர்.
அதேபோல பள்ளிகள் திறப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவை மாநில அரசுகளின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம் என்பதால் அதில் நாங்கள் தற்போதைக்கு தலையிட முடியாது எனவும் அறிவியல்பூர்வமான தெளிவான விளக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் சூழலில் இது தொடர்பான உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க முடியாது எனவும் கூறினார்.
























