இதமான காற்று வீசும் சமயத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் என்று ஐஐடி-யின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு உடல் திரவங்கள் மூலமும் பரவும் என்று கண்டறியப்பட்டது. அதன்பின் காற்று மூலமும் பரவலாம் என்று கூறப்பட்டதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்தது.இந்நிலையில் தென்றல் காற்றைப் போன்ற இதமான காற்று வீசும் சமயத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் என்று ஐஐடி ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

`Journal Physics of Fluids’என்ற இதழில், ஐஐடி மும்பை நடத்திய ஆய்வுக்கட்டுறை வெளியிடப்பட்டுள்ளது. ஐஐடி-யின் ஆய்வின்படி, ஒரு நபர் பொதுவெளியில் இருமும்போது, இருமிய திசையிலேயே தென்றல் காற்று போல இதமாக வீசினால், அதில் கொரோனா வைரஸ் நீண்ட தூரத்துக்கு வேகமாகப் பரவும். காற்று வீசாமல் இருக்கும் நேரத்தைவிட இதமான காற்று வீசும்போது வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருக்கும்’ என்று அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

இதுபற்றிப் பேசியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின் இணை ஆசிரியர் அமித் அகர்வால், “இந்த ஆய்வின் அடிப்படையில், ஒருவர் வெளிப்புறத்தில் இருக்கும்போது கட்டயாம் மாஸ்க் அணிய வேண்டும். குறிப்பாக இதமான காற்று வீசும் நேரங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் வாயிலாகப் பரிந்துரைக்கிறோம். மேலும் வெளிப்புறங்களில் இருமும்போதும் தும்மும்போதும் முழங்கையை மடக்கி, அதில் முகத்தை வைத்து இருமுவதும் தும்முவதும் வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
























