அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று பாஜகவை எதிர்த்து வீழ்த்த வேண்டும் என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான கோவா மாநிலத்தில் 2022ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோவா முற்போக்கு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாயை இன்று சந்தித்துப் பேசினார். அச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி “பாஜகவை எதிர்ப்பதில் இணைந்து செயல்படுவது தொடர்பாக விஜய் சர்தேசாயை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். நடைபெறவிருக்கும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் பிரிவதை தவிர்க்க வேண்டுமெனில் மாநிலக் கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும்” என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய விஜய் சர்தேசாய் “மம்தா பானர்ஜி மாநில அரசியலின் பெருமைமிக்கவர். பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது தொடர்பான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
























