Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக இயக்குநர் கரு.பழனியப்பன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Zee Tamil தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ’தமிழா தமிழா’. சமூகம், அரசியல், குடும்பம், ஆன் பெண் உறவுச்சிக்கல்கள் போன்ற பல்வேறு தலைப்புகள் சார்ந்து இருதரப்பாக விவாதிக்கப்படும் இந்நிகழ்ச்சியை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்துவழங்கிவருகிறார்.
வெற்றிகரமாக பல எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சியின் சில எபிசோடுகள் வலைதளங்களில் அவ்வப்போது நேர்மறையாக வைரலாவதுண்டு. அதே போல் சில எபிசோடுகள் மீம் கிரியேட்டர்களால் கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும் உண்டு.
இந்த நிலையில், இதைத் தொகுத்துவழங்கிவரும் தொகுப்பாளர் கரு.பழனியப்பன் ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், ”Zee Tamil உடனான நான்கு வருட “தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது! சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! நன்றி ZeeTamil, Siju Prabhakaran” என்று பதிவிட்டுள்ளார்.
திராவிடக் கொள்கைகளின் ஆதரவாளரான கரு.பழனியப்பன் அது சார்ந்த விஷயங்களையும், கருத்துகளையும் அவ்வப்போது நிகழ்ச்சியில் பேசுவதும் விவாதிப்பதும் உண்டு. இந்த நிலையில், தனது ட்விட்டர் பதிவில் ’திராவிடம், சுயமரியாதை உள்ளிட்ட சொல்லாடல்கள் கசப்பாக இருக்குமெனில் பயணத்தை முடிப்பதே நல்லது’ என அவர் குறிப்பிட்டுள்ளது கொள்கை சார்ந்து ஏதேனும் நெருக்கடியை அவர் சந்தித்திருப்பதன் விளைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எது எப்படியாயினும் இனி அந்நிகழ்ச்சியில் கரு.பழனியப்பனை அவரது ரசிகர்கள் மிஸ் செய்வர் என்பது மட்டும் உறுதி.


























