குஜராத்தைச் சேர்ந்த தம்பதி நரபலிக்காக தங்கள் தலையை நவீன கருவிகளின் உதவியுடன் துண்டித்து தீயில் இட்டு தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ராஜ்கோட் மாவட்டத்தின் விஞ்சியா கிராமத்தில் வசித்துவந்த விவசாயத் தம்பதியான ஹேமுபாய் மக்வானா (38), மற்றும் அவரது மனைவி ஹன்சபென் மக்வானா (35) தங்களது வீட்டில் கோரமான முறையில் தற்கொலை செய்துகொண்டு இறந்துகிடந்துள்ளனர்.
திகிலூட்டும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தற்கொலை குறித்து விஞ்சியா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரஜித்சிங் ஜடேஜா கூறுகையில், “தம்பதிகள் முதலில் தங்கள் தலையை ஒரு கயிற்றால் பிடிக்கப்பட்ட கில்லட்டின் போன்ற பொறிமுறையின் கீழ் வைப்பதற்கு முன், ஒரு தீ பலிபீடத்தை தயார் செய்துள்ளனர். அவர்கள் கயிற்றை விடுவித்தவுடன், ஒரு இரும்பு கத்தி அவர்கள் மீது விழுந்து, அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு, அது தீயில் அவை உருண்டு விழும்படியாக வடிவமைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மக்னா தம்பதியருக்கு 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். நரபலி நாளுக்கு முந்தையநாள் பெற்றோரால் அவர்கள் இருவரும் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் தங்கள் மாமாவைப் பார்க்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் வீடு திரும்பியபோது பெற்றோரின் தலையற்ற உடற்பகுதியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் அளித்த தகவலின்படி, தம்பதியினர் இருவரும் விருப்பத்துடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும், அவர்களின் மரணத்திற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் குஜராத்தியில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























