7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொறியியல் படிப்புக்கான கல்விக்கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
’’மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் வகையிலும் இந்த அரசு செயலாற்றி வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் இவ்வாண்டு சுமார் 10,000 மாணவர்கள் பயனடைவர். அரசுப்பள்ளிகளில் 7.5% உள் ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், கலந்தாய்வு கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணத்தை அரசே ஏற்கும். இது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்குப் பொருந்தும். உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாறவேண்டும்” என்று தெரிவித்தார்.
























