செல்போன்களில் பயன்படுத்தும் GooglePay செயலி மூலம் புதிய வகை பண மோசடி நடந்துவருவதாக காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்சமயம் எல்லா தரப்பு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியாக GooglePay உள்ளது. பெரிய ஷாப்பிங் மால்கள் முதல் சிறிய கடைகள் வரை எல்லா இடங்களிலும் தற்போது QRCode மூலம் பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டதால் பெரும்பாலும் GooglePay போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகளே பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்நுட்ப வசதிகள் வளர வளர அதைத் தவறாகப் பயன்படுத்தும் வழிகளும் உருவாக்கப்படுவது போல, தற்சமயம் அதிகம் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலியான GooglePay மூலம் மோசடிகள் ஆங்காங்கே நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஏதேனும் ஒரு எண்ணிலிருந்து தெரிந்தே நம் எண்ணுக்கு GooglePay மூலம் பணம் அனுப்பப்படுவதும், பின் தவறுதலாக நமக்கு பணம் அனுப்பப்பட்டதாக எதிர்தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு அப்பணத்தை திருப்பி அனுப்பக்கோரி வற்புறுத்தி, நாம் திருப்பி அனுப்புகையில் நம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் நமது அக்கவுண்டில் இருக்கும் பணம் திருடப்படுவதுமாக இந்த மோசடி நடைபெறுகிறது.
இதையடுத்து, ஏதேனும் தெரியாத ஒரு எண்ணிலிருந்து பணம் நம் கணக்கிற்கு வந்தால் அவர்களிடம் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள சொல்லவேண்டி தமிழ்நாடு காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற மோசடிகலிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.



























