தமிழக சமூக நலத்துறை அமைச்சராக, கடந்த 1991 முதல் 1996 வரை பதவி வகித்தவர் இந்திரகுமாரி. அந்த காலக்கட்டத்தில், அவருடைய கணவர் பாபு நடத்தி வந்த அறக்கட்டளை மூலமாக மெர்சி மதர் இந்தியா என்ற அறக்கட்டளை, பரணி சுவாதி கல்வி அறக்கட்டளை சார்பில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாக கூறி சமூக நலத்துறை சார்பில் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஊனமுற்றக் குழந்தைகளுக்கு இந்த நிதியின் மூலம், எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை எனச் சமூக நலத்துறையின் அப்போதைய செயலாளர் லட்சுமி பிரானேஷ் கடந்த 1997 ஆம் ஆண்டு அளித்த புகாரின் பேரில், சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்த்தில் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தார்.

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரின் கணவர் பாபுவிற்கும் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்குவதாகவும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட நீதிபதி, இந்திரகுமாரியின் உதவியாளராக இருந்த வெங்கட கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இந்திரகுமாரிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
























