பள்ளிகளைத் திறக்கும்படி முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினே செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒசூர் டைட்டன் நகரியத்தைச் சேர்ந்த ரவிராஜன்- உதயகுமாரி தம்பதியினரின் மகள் பிரஜ்னா. கொரோனா இரண்டாம் அலையால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் விரைவில் பள்ளிகளை திறக்குமாறு கோரிக்கை வைத்து முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தொலைபேசி எண்ணுக்கு முதல்வர் ஸ்டாலினே தொடர்பு கொண்டு மாணவி பிரஜ்னாவுடன் பேசியிருக்கிறார்.
நவம்பர் 1ம் தேதியிலிருந்து பள்ளிகளைத் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்படி பள்ளிகள் திறந்த பிறகு அம்மாணவி பள்ளிக்குச் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்களின் அறிவுரைப்படி தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறும், நன்றாக படிக்குமாறு அம்மாணவியை முதல்வர் வாழ்த்தியிருக்கிறார்.
























