1987ம் ஆண்டு இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியானார்கள். 20 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்றுத்தரக் காரணமாக இருந்த அந்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைப்பேன் என விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சட்டசபையில் பேசிய அவர்…
“சமூகநீதிக் கொள்கையின் தாய்மடியாக விளங்கக் கூடிய மாநிலம் நம் தம் தமிழ் மாநிலம். இட ஒதுக்கீடு என்னும் சமூக நீதியை நூறாண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்குக் கொண்டு வந்தது நீதிக்கட்சிதான். சுதந்திர இந்தியாவில் அதற்கு சட்டரீதியான இடர்பாடு வந்தபோது தந்தைப் பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்து அதற்கெதிராகப் போராடினர். அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் பிரதமர் நேருவிடம் வலியுறுத்திய பிறகு இட ஒதுக்கீட்டுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.
அதன்பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலேயே குறிப்பிட்ட சமூகம் தங்களுக்கென்று தனியாக 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று 1987ம் ஆண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போராட்டத்தில் அன்றைய அரசின் காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியானார்கள். சமூகநீதிப் போராளிகளான அவர்களின் இறப்புக்கு நியாயம் வழங்கும் வகையில் 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் இந்தியாவிலேயே முதல்முறையாக ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ என்கிற ஒரு பிரிவை உருவாக்கி20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
20 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காக தங்கள் உயிரை நீத்த அத்தியாகிகளின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தேன். யார் மறந்தாலும் அதை நான் மறக்க மாட்டேன். சொன்னபடியே விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 கோடி செலவில் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
























