மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி, ‘மகாகவி’ நாளாகக் கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழின் முன்னோடிக் கவிஞர் என்பதோடு விடுதலை வேட்கைக் காலகட்டத்தில் புரட்சிகரமான தன் கவிதைகளின் மூலம் தமிழ் மக்களின் மனதில் எழுச்சியை விதத்தவர் சி.சுப்ரமணிய பாரதி என்கிற பாரதியார். வெள்ளையர்களுக்கு எதிராக ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று நெஞ்சு நிமிர்த்திப் பாடிய புலவன் பாரதி. நிகரில்லாக் கவிஞரான பாரதி என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்.
இந்நிலையில் பாரதியின் நினைவு நாளை ‘மகாகவி’ நாளாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். அவற்றில், பாரதியாரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து ’மனதில் உறுதி வேண்டும்’ என்கிற தலைப்பில் புத்தகமாக 37 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி அதில் வெல்வோருக்கு ’பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும். பாரதி சிலை மற்றும் பாரதியின் உருவம் பொறித்த கலைப்பொருட்கள் பூம்புகார் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்பது போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
























