அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பார்டர் திரைப்படத்தின் உருவாக்கத்தைப் பாராட்டி இயக்குநர் அறிவழகனுக்கும் ஒளிப்பதிவாளர் ராஜசேகருக்கும் ஆப்பிள் ஐ பேட் ப்ரோ பரிசாக வழங்கி சிறப்பித்திருக்கிறார் அருண் விஜய்.

அருண் விஜய் நீண்ட காலம் திரைத்துறையில் இருந்தாலும் அவருக்கென ஓர் இடம் இன்னும் கிடைக்காமலேயே இருக்கிறது. திரைப்படத்தில் நடிகனாக தன்னை முன்னிறுத்த அயராது உழைத்துக் கொண்டிருக்கும் அவருக்கு தடையறத்தாக்க, தடம் போன்று அவ்வப்போது நல்ல வெற்றிப்படங்கள் அமைகின்றன. தடம் படத்துக்குப் பிறகு அவர் மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவற்றுள் பார்டர் திரைப்படம் முக்கியமானது. இத்திரைப்படத்தினை ஈரம், வல்லினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் போஸ்டரில் அருண் விஜயின் லுக் அனைவரையும் கவர்ந்தது. எல்லோரையும் ஈர்க்கும் விதத்தில் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.
திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் அதன் வெளியீட்டுத் தேதி குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. முழுமையடைந்த படத்தைப் பார்த்த அருண் விஜய் படம் நன்றாக வந்திருப்பதைப் பாராட்டி இயக்குநர், ஒளிப்பதிவாளர் இருவருக்கு ஐ பேட் பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார்.
























