இன்று உலக இதய தினம். மனித உடலின் இன்றியமையாத உறுப்பான இதயத்தின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வோம். இதயம் தொடர்பான பிரச்னைகளில் முக்கியமானது மாரடைப்பு. இதன் விளைவாக மரணங்கள் நிகழ்கின்றன என்பதால் மாரடைப்பு குறித்தும் அதற்கான அறிகுறி, முதலுதவி மற்றும் சிகிச்சை பற்றி அறிந்து கொள்வோம். ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இதய நிபுணர் மீனாட்சி இது குறித்து விளக்குகிறார்…

“இரத்தத்தை பம்ப் செய்து நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் செலுத்துவதுதான் இதயத்தின் பணி. மூன்று இரத்தக் குழாய்கள் வழியாக இதயத்துக்கு இரத்தம் செல்கின்றன. அந்த இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இரத்த அடைப்பு ஏற்படுவதுதான் மாரடைப்பு ஆகும். சிறு வயதிலிருந்தே நம் உடலில் நிறையை கொழுப்பு சேர்ந்து பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும். இதயத்தில் கொழுப்பு சேர்கையில் இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும். இந்நிலையில் உடல் மற்றும் உளவியல் ரீதியான அழுத்தம் காரணமாக தேங்கியிருக்கும் கொழுப்பு ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பைப் பொறுத்த வரைக்கும் பெண்களை விட ஆண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பெண்களைப் பொறுத்த வரை மாதவிடாய் சுழற்சி காரணமாக உடலில் நிகழும் மாற்றங்கள் காரணமாக மாரடைப்புக்கான வாய்ப்புகள் குறைகிறது. ஆனால், மெனோபாஸுக்குப் பிறகு ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கும் மாரடைப்புக்கான சாத்தியங்கள் இருக்கின்றன. மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும் என்று பார்ப்போம். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் வம்சாவழியாக கொழுப்பு மிகுந்துள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியலின் விளைவாக உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மாரடைப்புக்கான சாத்தியங்கள் அதிகளவில் இருக்கின்றன.
மாரடைப்பு என்பது முதலில் நெஞ்சு வலியாகத்தான் வரும். ஆனால், எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பாக இருக்குமா என்றால் இல்லை. சாதாரண நெஞ்சு வலியும் உள்ளது. அது சிறிது நேரத்திலேயே சரியாகி விடும். 20 நிமிடங்களுக்கும் அதிகமாக நெஞ்சு வலி இருக்கிறதென்றால் அது மாரடைப்பாக இருக்கும் என்பதால் உடனே மருத்துவமனைக்குச் சென்று விட வேண்டும். மாரடைப்பு என்பது நெஞ்சு வலியாக மட்டுமே இருக்கும் என்றல்ல, வயிற்றெரிச்சல், தொண்டை வலி, கை வலி, முதுகு வலியாகக் கூட ஏற்படலாம். மூச்சுத் திணறல், நடக்கக்கூட முடியாத அளவுக்கு இருத்தல், படபடப்பு ஆகியவை கூட மாரடைப்பின் அறிகுறிதான்.

வயிற்றெரிச்சல் மற்றும் நெஞ்சு வலிக்கு சோடா வாங்கிக் குடித்தால் சரியாகி விடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அஜீரணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டால் கூட சோடா வாங்கிக் குடிப்பது தவறு. அஜீரணத்துக்கான மருந்துகளை வாங்கித்தான் உட்கொள்ள வேண்டும். நெஞ்சு வலி ஏற்படும்போது எந்த முன்முடிவுக்குள்ளும் செல்லாமல் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டும். மாரடைப்பு ஏற்படக்கூடியவர்களில் 40 சதவிகிதம் பேர் மருத்துவமனை வருவதற்குள்ளாகவே மரணமடைந்து விடுகின்றனர். கால தாமதம் இதற்கு முக்கியக் காரணம்.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால் அதற்கென செய்ய வேண்டிய முதலுதவி குறித்த பயிற்சிகளை பலருக்கும் வழங்கி வருகிறோம். அந்த லைஃப் சப்போர்ட் ட்ரெய்னிங்கை அனைவரும் எடுத்துக் கொள்வது அவசியம். மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் மயங்கி விழுந்து விட்டார் என்றால் அவர் மார்பில் அழுத்துவது, வாயில் வைத்து மூச்சுக்காற்றை ஊதி சுவாசம் கொடுப்பது போன்ற முதலுதவிகளை மேற்கொள்வதன் மூலம் மருத்துவமனை செல்லும் வரை அவரால் தாக்குப்பிடிக்க முடியும்.
இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது இதயம் மட்டுமன்றி மற்ற உறுப்புகளின் திசுக்கள் செயலிழந்து போகும். இதனால் நிறைய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் மாரடைப்பைப் பொறுத்த வரை காலம் கடத்தாமல் உடனடியாக சிகிச்சைக்கு கூட்டிச் செல்ல வேண்டியது அவசியம்.
மாரடைப்பைப் பொறுத்த வரை இதயத்துக்குச் செல்லும் இரத்த நாளங்களில் 50 சதவிகித கொழுப்பு அடைத்துக் கொள்ளுதல் மற்றும் 50 ரத்தம் உறைந்து போதல் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இதற்கு இரண்டு வகையான சிகிச்சைகள் உண்டு. முதலாவது இரத்த நாளங்களில் உறைந்துள்ள இரத்தத்தை மருந்து கொடுத்து கரைப்பது. இரண்டாவது ஆஞ்சியோகிராம். கை அல்லது கால் நரம்பு மூலமாக ஆஞ்சியோகிராம் குழாயை இதயத்துக்கு செலுத்தி உறைந்துள்ள ரத்தம் மற்றும் கொழுப்பைக் கரைத்து அடைப்பை நீக்கி, அங்கே சுருங்கி விரியும் பலூன் போன்ற ஓர் மெட்டீரியலை வைப்பது. இவற்றில் ஆஞ்சியோகிராம்தான் சிறந்த சிகிச்சை. ஆனால் மாரடைப்பு ஏற்படுகையில் எல்லோருக்கும் அதற்கான வாய்ப்பு இருக்காது என்பதால் மருந்துகள் மூலம் கரைக்கும் சிகிச்சையையே மேற்கொள்ளலாம்.
மது, புகைப்பழக்கங்களை தவிர்த்து உடற்பயிற்சி மேற்கொண்டு முறையான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றி மாரடைப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசியம். மாரடைப்பு ஏற்படுகையில் காலம் கடத்தாமல் மருத்துவமனைக்குச் செல்வதும் அவசியம். இதய நலம் பேணுவோம்” என்கிறார் மீனாட்சி.
























