சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை சங்கர் ஜிவால் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தனது அறையில் வழக்கமான அலுவலை கவனித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனிருந்த அதிகாரிகள் அவரை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னையில் 108ஆவது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆவார். இவர் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக காவல் துறையில் சேர்ந்தார். இவர் மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
























