ஐபிஎல் தொடரில் டெல்லி – கொல்கத்தா அணிகளுக்கிடையேயான குவாலிஃபயர் 2 போட்டி இன்று நடைபெறவுள்ள்ள நிலையில் சமபலத்துடன் இருக்கும் இரண்டு அணிகளில் எந்த அணி வெல்லப் போகிறது என்கிற பதற்றம் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நான்கு அணிகள் தேர்வாகின. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த சென்னை – டெல்லி அணிகளுக்கிடையேயான குவாலிஃபயர் 1 போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் மூலம் 9 வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது. தோற்ற டெல்லி அணி குவாலிஃபயர் 2 போட்டிக்குத் தேர்வானது. மூன்று மட்டும் நான்காவது இடங்களில் இருந்த பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை வீழ்த்தி குவாலிஃபயர் 2 க்கு தேர்வானது.
இந்நிலையில், இன்று இரவு 07.30க்கு நடைபெறவுள்ள குவாலிஃபயர் 2 போட்டியில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்குத் தேர்வாகும். இச்சூழலில் எந்த அணி வெல்லப்போகிறது என்பது குறித்த முன் தீர்மானத்துக்கே செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
டெல்லி அணியைப் பொறுத்த வரை பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே அந்த அணி பலமாக இருக்கிறது. ப்ரித்வி ஷா, ஷிகர் தவாண், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஹெட்மயர் போன்ற பேட்ஸ்மேன்களும், ரபாடா, நோர்ஜா, ரபாடா போன்ற பவுலர்களும் அஷ்வின் போன்ற ஆல்ரவுண்டர்களும் அணியின் பலமாக இருக்கிறார்கள். லீக் போட்டிகளில் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணியே முதலிடத்தைப் பிடித்திருந்தது.
கொல்கத்தா அணியும் சளைத்ததல்ல என்று சொல்லுமளவும் திறமையான வீரர்களைக் கொண்டிருக்கிறது. சுப்மன் கில், ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயர், இயான் மார்கன் போன்ற பேட்ஸ்மேன்களும், குல்தீப் யாதவ், ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி போன்ற பவுலர்களும் சுனில் நரேன், ஆண்ட்ரூ ரசல் போன்ற ஆல் ரவுண்டர்களும் அணிக்கு பெரும் பலமாய் இருக்கிறார்கள்.
டெல்லி, கொல்கத்தா ஆகிய இரு அணிகளுமே சேசிங்கில்தான் அதிக முறை வெற்றி பெற்றிருக்கின்றன. இன்றைய போட்டியில் எந்த அணி டாஸ் ஜெயித்தாலும் முதலில் பவுலிங்கையே தேர்வு செய்யும். டிஃபெண்டிங்கில் இரண்டு அணிகளுமே பல தோல்விகளைக் கண்டிருப்பதால் டாஸ் வெல்கிற அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
























