நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனைக்குரியது என்றும் தேர்வு முடிவு எப்படி வந்தாலும் அதனை தோல்வியாகக் கருதாமல் மனதிடத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மாநில பொது சுகாதார ஆய்வகம் திறப்பு விழா மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

”நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வருத்தத்திற்குரியது. மாணவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க கூடாது. தேர்வில் எப்படி முடிவு வந்தாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும்தான் சிந்திக்க வேண்டுமே தவிர, அதனை தோல்வியாக எடுத்துக்கொள்ள கூடாது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு War room மூலம் உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்.
நீட் தேர்வுக்கு எதிராக ஏற்கனவே அதிமுக அனுப்பிய சட்ட மசோதாவுக்கும் தற்போது தமிழக அரசு நிறைவேற்றி இருக்கும் சட்ட மசோதாவுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நீட் தேர்வு அச்சம் காரணமாக 16 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையிலும் கூட நீட் தேர்வை வைத்து நாடகம் நடத்துகிறார்கள் என்று பாஜகவினர் கூறுகிறார்கள். யார் நாடகம் ஆடுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும்” என்று தெரிவித்தார்.
























